Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Friday, November 16, 2018

தினம் ஒரு பாசுரம் - 85

தினம் ஒரு பாசுரம் - 85

இன்று (16 நவம்பர் 2018) பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாமவரான, திருக்கடல்மல்லை எனும் மாமல்லபுரத்தில் தோன்றிய, இரண்டாம் திருவந்தாதி என்ற பிரபந்தத்தை அருளிய பூதத்தாழ்வார் அவதரித்த திருநட்சத்திரம் (ஐப்பசியில் அவிட்டம்). அவரது பாசுரம் ஒன்றை நோக்குவோம்.





அத்தியூரான் புள்ளை யூர்வான் அணிமணியின்
          துத்திசேர் நாகத்தின் மேல் துயில்வான் - மூத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்
          இறையாவான் எங்கள் பிரான்
                     -
இரண்டாந்திருவந்தாதி - 96


அத்தியூர் எனப்படும் திருக்காஞ்சி நகரில் கோயில் கொண்டுள்ள வரதராஜப் பெருமாளை (தேவராஜன்) மங்களாசாசனம் செய்கிறார், ஆழ்வார். திருவரங்கம் (கோயில்), திருவேங்கடத்திற்கு (திருமலை) அடுத்து மிகுந்த சிறப்பு மிக்க திவ்யதேசமிது. பெருமாள் கோயில் என்றும், விஷ்ணு காஞ்சியென்றும், அத்திகிரியென்றும், வேதகிரி, திருக்கச்சி என்றும் போற்றப்படுகிற திருத்தலமாகும்.

இத்திருத்தலம் திருமங்கையாழ்வாரால் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீஆளவந்தார், இராமானுஜர், சுவாமி தேசிகன், மணவாள மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பி என பல வைணவ ஆச்சார்யன்கள் உகந்து போற்றித் துதித்தவன் தேவராஜன் எனும் வரதன்.

மூலவர்
ஸ்ரீவரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள்,
அத்தியூரான் என்று பல திருநாமங்கள். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார்
பெருந்தேவித் தாயார்

விமானம்
புண்ணியகோடி விமானம்

ஐராவதம் என்ற யானையே மலை வடிவங் கொண்டு எம்பெருமானைத் தாங்கி நிற்பதான பழங்கதையை ஒட்டி அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது. க என்றால் பிரம்மன், அஞ்சிரம் என்றால் பூசிக்கப்படல் என்பதாலும், கஞ்சிரம் என்றாகி கஞ்சிதபுரியாகி காலப்போக்கில் மருவி காஞ்சிபுரம் ஆயிற்று என்ற வழக்குண்டு. பக்தர்களுக்குக் கேட்கும் வரமெல்லாம் அளிக்கும் எம்பெருமானுக்கு #வரதர் எனும் திருநாமம் பொருத்தமே.

பல்லவ மன்னவர்களும், விஜய நகர மன்னர்களும் இத்தலத்திற்குப் பெருந் தொண்டாற்றியுள்ளனர். கிழக்கு கோபுரம் கிருஷ்ண தேவராயராலும், மேற்கு கோபுரம் பல்லவர்களாலும் கட்டப்பட்டதாகும். பல்லவர்களின் அழகிய கலைச்சிற்பங்களை கோயிலில் காண முடிகிறது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னவர்களின் தலைநகரமாக காஞ்சி விளங்கியது. கிருஷ்ண தேவராயர் புண்ணியகோடி விமானத்தில் பல சிற்ப வேலைகள் செய்வித்தார். அச்சுத தேவராயர் எடைக்கெடை தங்கம் தந்தார். சோழ மன்னர்களும் பல திருப்பணிகள் செய்துள்ளனர். திருமலை நாயக்கரும் விலை மதிப்பில்லா அணிகலன்களை இப்பெருமாளுக்கு அணிவித்துள்ளார்.

இங்கு நடைபெறும் வைகாசி விசாகக் கருடசேவை, பிரசத்தி பெற்ற ஒன்று. இங்கு தோன்றிய திருக்கச்சி நம்பிகள், ராமனுஜருக்கு குரு. நம்மாழ்வார் தமது திருவாய் மொழி முதல் பாசுரத்தில் ”அயர்வறு அமரர்கள் அதிபதி எவனவன்” என்றது இப்பெருமாளைத் தான் என்பது வைணவ பெருந்தகைகள் வாக்கு. இப்பெருமானைத் திருக்கச்சி நம்பிகள் தேவராஜஷ்டகம் என்னும் தோத்திரத்தாலும், வேதாந்த தேசிகர் வரதராஜ பஞ்சாசத் என்னும் தோத்திரத்தாலும், மணவாள மாமுனிகள் தேவராஜ மங்களம் என்னும் தோத்திரத்தாலும் துதித்துப் போற்றியுள்ளனர்.

இங்குள்ள குளத்தில் மூழ்கியிருக்கும் #அத்திவரதர் என்றழைக்கப்படும் அத்திமரத்தாலான மூர்த்தியை 40 வருடங்கட்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளச் செய்வது மரபு, 10 தினங்கட்குப் பொதுமக்கள் தரிசனத்திற்குப் பின் மீண்டும் குளத்திற்குச் சென்று விடுவார் அத்தி வரதர். 1979-க்குப் பிறகு, ஜூலை 15, 2019-ல் அத்திவரதர் மீண்டும் நமக்குக் காட்சியளிப்பார்

பிரம்மன் செய்த யாகத்தில் தீப்பிழம்பாக தேவப்பெருமாள் காட்சி அளித்ததாக பழங்கதை ஒன்றுண்டு. இங்குள்ள உத்சவரின் திருமுகத்தில் அக்னியின் வடுக்கள் போன்ற புள்ளிகளைக் காணலாம்.

பெருந்தேவனார் என்ற சங்ககாலப் புலவர்

     ‘தேனோங்கு நீழற் திருவேங்கட மென்னும்
          வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்குந்
     தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
          சொன்னார்க்கு உண்டோ துயர்’


எனப் பாடியிருப்பதை வைத்து, சங்க காலத்திலேயே இத்தலம் சிறப்புற்றிருந்ததை உணர முடிகிறது.

அத்தியூரான் - அத்தியூர் எனும் திருக்காஞ்சியில் எழுந்தருளி இருப்பவனும்
புள்ளை யூர்வான் - கருடனாகிய பறவையை வாகனமாகக் கொண்டு உலா வருபவனும்
அணிமணியின் - அழகார்ந்த மணிகளுடன் கூடிய
துத்திசேர் நாகத்தின் மேல் - படத்தில் பொறிகளுடன் ஆன நாகமான அனந்தன் எனும் ஆதிசேடன் மீது
துயில்வான் - அறிதுயில் (யோக நித்திரை) புரிபவனும்
மூத்தீ - யாகத்தில் மூன்று வகை நெருப்புகளாக தோன்றுபவனும்.
மறையாவான் - நால் வேதங்களுக்குப் பொருளானவனும்
மாகடல் நஞ்சுண்டான் தனக்கும் - திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலகாலம் என்னும் கொடிய நஞ்சை உண்ட சிவனுக்கும்
இறையாவான் எங்கள் பிரான் - இறையானவனும் தான் நாங்கள் பூசிக்கும் தலைவன்


”மூத்தீ மறையாவான்” என்பதை “முத்தி மறையாவான்” என்று கொண்டால், முக்தி எனும் மோட்சத்தை அருளவல்ல நான்மறைகளில் உறைந்திருப்பவன் என்று பொருள் கொள்வதில் ஒரு நயம் உள்ளது.

---எ.அ. பாலா

Tuesday, May 24, 2016

தினம் ஒரு பாசுரம் - 74

தினம் ஒரு பாசுரம் - 74

கையில் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும், உந்தன்

மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான், நிரயத்

தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள் நீ

செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங் கொண்டலே!


- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)

கூரத்தாழ்வானின் சீடரான திருவரங்கத்து அமுதனார் எம்பெருமானாரை உகந்து அருளிய இன்னொரு பாசுரத்தை இன்று அனுபவிக்கலாம்.

பொருளுரை:

கையில் கனியென்னக் - (உள்ளங்)கையில் (நெல்லிக்)கனி எனும் அளவுக்குத் தெளிவாக.
கண்ணனைக் காட்டித் தரிலும், - கண்ணனான திருமாலை (என் முன் வரவழைத்துக்) காட்டிப் புரியவைத்தாலும்
உந்தன் மெய்யில் பிறங்கிய - உனது திருவடிவத்தில் ஒளி வீசுகின்ற
சீர் அன்றி - மேன்மை மிக்க (கல்யாண) குணங்களை அனுபவிப்பதை விடுத்து வேறொன்றும்
வேண்டிலன் யான், - நான் (உன்னிடம்) வேண்ட மாட்டேன்
நிரயத் தொய்யில் கிடக்கிலும் - நரகச் சேற்றில் உழன்றாலும்
சோதிவிண் சேரிலும் - சோதி வடிவ பரமபதத்தைச் சென்றடைந்தாலும்
இவ்வருள் நீ - இது ஒன்றை மட்டும் (அடியேனுக்கு) நீ அருள வேண்டும்
செய்யில் தரிப்பன் - (நீ அங்ஙனம்) செய்தால் (நான் மிக்க மகிழ்வோடு) அபிமானித்து  நிலைத்திருப்பேன்
இராமானுச! - எம்பெருமானாரே!
என் செழுங் கொண்டலே! - (மழை நீர் தாங்கிய) செழுமையான மேகம் போன்றவரே!



பாசுரச் சிறப்பு:  இப்பாசுரத்தில் பரமபதம் சென்றடையும் “உய்வு” கூடத் தனக்கு அத்தனை அவசியமில்லை, ராமானுஜரின் அணுக்கமே (intimacy) எப்போதும் வேண்டும் என்கிறார், “உய்ய ஒரே வழி உடையவர் திருவடி” என்பதை முற்றும் உணர்ந்த அருஞ்சீலரான அமுதனார்!

கண்ணனைக் காட்டித் தரிலும் - இது வெறும் “காட்டித் தருதல்” அன்று.
கண்ணனை முன் கொணர்ந்து நிறுத்தி, “இவன் தான் பரமபத நாயகன், அன்று குருட்சேத்திரத்தில் அருச்சுனனுக்குக் கீதோபதேசம் அருளிய, யுத்த களத்தில் அவன் தேர் முன் நின்று முகத்தில் அம்புத்தழும்புகள் ஏற்ற திருவல்லிகேணி வேங்கடகிருஷ்ணன், கபிஸ்தலத்தின் ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன், திருப்பாற்கடல் கிடக்கும் மாயன், ஆண்டாள் பாடிய கிருஷ்ண சிம்மம் (மாரி மலை முழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கம்), விஷ்ணுசித்தர் குழந்தையாய்/ பாலகனாய் பாவித்து உருகிய கோகுலக் கண்ணன், நப்பின்னை வேய்ந்தோள் அணைத்த அவள் மணாளன், காஞ்சி திருப்பாடகத்தில் அமர்ந்த திருக்கோலப் பாண்டவத்தூதன், பாஞ்சாலியின் மானம் காத்த புனிதன், ஏழை சுதாமரிடம் உயர்வு/தாழ்வு நோக்கா பேரன்பைக் (சௌசீல்யம்/வாத்சல்யம்) காட்டியவன், ஒரு யானையைக் (குவலயாபீடம்) கொன்று ஒரு யானையைக் (கஜேந்திரன்) காத்த சர்வலோக ரட்சகன்” என்றெல்லாம் விளக்கிச்சொல்லி, சரணாகதியையும், திருமந்திர, த்வய, சரம ஸ்லோகங்களையும், இன்னபிற வைணவத் தத்துவங்களையும் உபதேசித்துத் தெளிவித்தலை, இதன் சாரமாக, உட்பொருளாகக் கொள்ளல் தகும்!

உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான்

மேலே சொன்ன வண்ணம் “கண்ணனைக் காட்டித் தந்ததால்” அமுதனாருக்கு ஞானத் தெளிவு பிறக்காமல் இல்லை. அப்பெரும் புரிதல் கிடைத்த பின்னரும் “இராமனுஜரே, உம் மேன்மையை அனுபவிக்கும் பேறு மட்டுமே எனக்கு உவப்பானது, அது கிடைத்தால், எனக்கு நரகமும், பரமபதமும் ஒன்றே” என்று திருவரங்கத்து அமுதனார் அற்புதமாக அருளுகிறார்! என்னே அவரது ஆச்சார்ய பக்தி!


 நிரயத்தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள் நீ --’நிரயம்’ நரகத்தையும், ’தொய்யில்’ சேறு அல்லது குழம்பையும் குறிக்கிறது.  1) மானுடப் பிறப்பில் சம்சார பந்தத்தில் உழல்வது, 2) தீவினைப் பயனால் அடுத்த பூவுலகப்பிறப்பின் முன் நரகத்தில் துன்புறுவது என இரண்டையும், ”நிரயத் தொய்யில் கிடக்கிலும்”  குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த இரண்டுக்கும் மிக மிக மேலான/ உய்வான/ பிறப்பறுக்கும் பெரும்பேறான பரமபதம் கூட, ராமானுஜரின் அணுக்கம் இல்லாத நிலையில், தனக்கு உவப்பன்று என்று அடியவர்க்கு உணர்த்துகிறார் அமுதனார்.

செழுங்கொண்டலே - பொதுவாக குருவை (ஆச்சார்யனை) மேகத்தோடும், பசுவோடும் ஒப்பிடும் வழக்கம் உண்டு. மழை நீர் நிறைந்த செழுமையான மேகம் ஞானம் நிறைந்த குருவுக்கு உருவகம் ஆகிறது. அது போலவே “பால் தரும் பசு” ஞானம் தரும் குருவுக்கு உருவகமாகிறது.


சொற்பொருள்:

பிறங்குதல்
விளங்குதல்; உயர்தல்; சிறத்தல்; மிகுதல்; பெருகுதல்; நிலைமாறுதல்; செறிதல்; பெருத்தல்; ஒலித்தல்.

நிரயம்
நரகம் .......... நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது (புறநானூறு).

தொய்யில் அல்லது தொய்யல்:
மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு; உழுநிலம்; கீரைவகை; அழகு; கிளர்ச்சி; நீர்க்கொடிவகை.

தரித்தல்
மதித்தல், ஆதரித்தல், நிலைபெற்று நிற்றல்; இருப்புக்கொள்ளுதல்; ஊன்றி நிற்றல்; அணிதல்; தாங்குதல்; பொறுத்தல்; அடக்கிக் கொள்ளுதல்; மறவாது உள்ளத்தில் வைத்தல்; தாம்பூலம் தின்னுதல்.

கொண்டல்
கொள்ளுதல்; மேகம்; காற்று; கீழ்காற்று; கிழக்கு; மேடராசி; கொண்டற்கல்; மகளிர் விளையாட்டு வகை.
எ.கா: “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்” - திருப்பாணாழ்வார்.  இங்கு கண்ணபிரானை கருநீல மேக நிறத்தவன் என்கிறார் ஆழ்வார்.

--- எ.அ.பாலா

Monday, July 29, 2013

வாலி(ப) சகாப்தம்

வாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா
வாலி ஒரு மகா கவிஞன் என்பதைத் தாண்டி அவரின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுவது, தனது கடைசி மூச்சு வரை தன்னை RELEVANT ஆக வைத்துக் கொண்ட தன்மையைத் தான். இறுதி வரை தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார் என்று தான் கூற வேண்டும். அதனாலேயே, அவரால் எம்ஜியார் தொடங்கி தனுஷ் வரை ஹிட் பாடல்களை அள்ளி வழங்க முடிந்தது. கண்ணதாசனுக்கு அடுத்து அவரளவுக்கு மொழியை வசப்படுத்தி வைத்திருந்தவர் யாருமில்லை. கற்பனை வளம், சொல் ஆளுமை (vocabulary), தமிழ் மேல் காதல் என்ற மூன்றும் அதீதமாக வாய்க்கப் பெற்றவர் வாலி. 15000-க்கும் மேல் பாடல்கள் புனைந்த அவர், தமிழ் பாடலாசிரியர்களில் சச்சின் டெண்டுல்கர்.

ஸ்ரீரங்கம் அருகே திருப்பராய்த்துறையில் 1931-ல் டி.எஸ்.ரங்கராஜனாக் பிறந்து, சென்னை கலைக்கல்லூரியில் பயின்று, வாலி சில ஆண்டுகள் ஆல் இந்தியா ரேடியோவில் பகுதி நேர வேலை பார்த்தவர். சினிமா வாய்ப்புக்காக அலைந்த சமயத்தில், அவருக்கு உதவியவர்களில் குணச்சித்திர நடிகர் வி.கோபாலகிருஷ்ணனும், பாடகர் டி.எம்.எஸ்ஸும் முக்கியமானவர்கள். வாலி வார்த்தைச் சித்து விளையாட்டில் கை தேர்ந்தவர் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் டி.எம்.எஸ். வாலி டி.எம்.எஸ்-ஸுக்கு ஒரு போஸ்ட் கார்டில் அனுப்பிய கவிதை, இசை வடிவம் பெற்று, டி.எம்.எஸ்-ஸாலேயே பாடப்பட்டு ”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்று AIR-ல் பெரும்பிரபலம் அடைந்தது. ’அழகர் மலைக்கள்ளனாக’ ஆரம்பித்த வாலியின் சகாப்தப் பயணம் ‘காவியத்தலைவனாக’ முடிவுற்றதில் ஆச்சரியமில்லை!



எம்ஜியாருக்கு வாலி எப்போதும் “ஆண்டவரே” தான். எம்ஜியாருக்காகவே எழுதப்பட்ட ஹிட் பாடல்கள் தான் எத்தனை!

1. தரை மேல் பிறக்க வைத்தான்
2. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
3. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
4. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
5. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு
6. கண் போன போக்கிலே கால் போகலாமா
7. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே


என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

வாலி என்று தனக்கு நாமகரணம் செய்து கொண்டதற்கு அவருக்கு ஓவியர் மாலி மேல் இருந்த அபிமானமே காரணம். வாலியே ஓரளவுக்கு நன்றாக வரைவார். வசன கவிதையில் / பேச்சில் எதுகை மோனையில் அவரை விஞ்ச இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். அவரது திரைப்பாடகளில் மட்டுமன்றி, அவரது கலகலப்புப் பேச்சிலும் ஒரு தன்னிச்சையான இயல்பு (spontaneity) இருந்ததும், அவரது பேச்சை கேட்கத் தூண்டுவதாக இருந்தது.
“ஊக்குவிக்க ஆளிருந்தா ஊக்கு விக்கறவன் கூட தேக்கு விப்பான்”

ஒரு முறை வாலி வீட்டுக்கு ஒரு பாம்பு வந்த விஷயம், நாளிதழ்களில் முக்கியச் செய்தியாக வந்து விட, பலரும் அவரை விசாரிக்க, ஒருவர் மட்டும் “உங்க வீட்டுக்கு மட்டும் ஏன் பாம்பு வர வேண்டும்?” என்று குசும்பாக கேட்க, வாலி தனக்கே உரித்தான பாணியில், “படமெடுக்கறவங்க எவ்வளவோ பேர் வராங்க, பாம்பு வந்தா என்னய்யா!” என்று ஒரு போடு போட்டாராம். பிறிதொரு சமயம், எம்ஜியார், வாலியை வெறுப்பேத்த, ”உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் டைட்டில் கிரெடிட்ஸில், பாடலாசிரியாராக வாலியின் பெயரை போடப் போவதில்லை என்று சொன்னபோது, வாலி உடனே “அப்படி உங்களாலே படத்தை ரிலீஸ் பண்ணவே முடியாது” என்றாராம். எம்ஜியார் விடாப்பிடியாக, ‘பண்ணிக்காட்டறேன் பாருங்க’ என்று கூற, வாலி “அதெப்படி ’வாலி’ இல்லாம நீங்க படத்தை ‘உலகம் சுற்றும் பன்’ என்றா ரிலீஸ் பண்ணுவீங்க?!” என்றவுடன் எம்ஜியார் சிரித்து விட்டு வாலியை தழுவிக் கொண்டாராம்.

அய்யங்காரான வாலிக்கு மீன் குழம்பு பிடிக்கும் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. சிலபல சமயங்களில் கட்டாயத்தின் பேரிலோ (நட்பின் பேரிலோ!) அவரது அரசியல் சார்பு ஜால்ரா தான் சற்று அயற்சியைக் கொடுத்தது. ஆனால், அதிலும் இருந்த மொழி வளமும், சொல் விளையாட்டும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. எ.கா: ’ஏ.எம், பி.எம் பார்க்காத ஒரே சி.எம் நீ தான்’. வாலியின் (கலைஞருக்கு) ஜால்ரா கவிதை ஒன்றை இங்கே காணலாம்.


இந்தக் கவிதையிலும் (ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்), இது தவிர ஓரிரு சமயங்களிலும், வாலி ஜெ.ஜெ-வை கிண்டலாக விமர்சித்திருந்தாலும், புள்ளி விவரங்களுடன் விமர்சகர்களுக்கு பதில் / விளக்கம் தரும் ஜெ.ஜெ, வாலி குறித்து எதுவுமே பேசியதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அது போல, பெரும்பாலான சினிமா ஆசாமிகள் போல அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் வாலி ஜால்ரா தட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். கருணாநிதி மேல் கடைசி வரை வாலி அபிமானத்துடனே இருந்தார்!

பிடித்த வாலியின் பாடல்கள் என்று பெரிய ஒரு லிஸ்ட் இருந்தாலும், சிலபல பாடல்கள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

1. வெண்ணிலா வரும் வேளையில் நான் விழித்திருந்தேன், என்னவோ கனவுகளில்...
2. மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டனே
3. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
4. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
(ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா, வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா - மறக்க முடியாத சரண வரிகள்)
5. வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
6. காதோடு தான் நான் பாடுவேன், மனதோடு தான் நான் பேசுவேன்
7. ஒன்னை நினைச்சே பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
8. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்

9. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
10. அம்மா என்றழைக்காத உயிரில்லையே
11. காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா


வாலி பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் தருபவர். “சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனி” என்ற  பாடலுக்கு, பல்லவி வரிக்கு முன் ஒரு சொல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யாரோ பிரியப்பட, வாலி “செஞ் சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனி” என்று பல்லவியை ஒரு நொடியில் அழகாக்கி விட்டார். வாலிக்குப் பிடித்த பாடல் குறித்து, ஒரு பேட்டியில், ஒரு வரலாற்றைப் பதிவு செய்த வகையில் அமைந்த கண்ணதாசனின் “நிலவைப் பார்த்து வானம் சொன்னது...” பாடலை வாலி பிரமிப்புடன் குறிப்பிட்டு இருக்கிறார். அப்பாடலில் வரும் 

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது”
என்ற சரண வரிகளை நினைவு கூர்க!

வாலி கண்ணதாசன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தவர். சமீபத்தில் வாலி பற்றிய சந்தக்கவிதையாக எழுதப்பட்டதில் “கண்ணதாசன் கொடி அகற்றி கண்ணதாசனை வென்றாய்” என்பதை ஏற்றுக் கொள்ள வாலி ஒரேடியாக மறுத்து, பின்னர் அவ்வரிகள் “கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் வந்தாய்; கண்ணதாசன் கொடியோடு கொடி நாட்டி நின்றாய்” என்று மாற்றப்பட்டது.

எண்பத்து ஒன்று வரை தமிழ் எழுதி
கண்பட்டும் நிறைவாகவே வாழ்ந்த பின்னும்
மண்பட்டு உன் உடல் போகையிலே
புண்பட்டுப் போனாளய்யா தமிழன்னை!


என்று அவருக்கு உரித்தான ஸ்டைலிலும், “ராஜனுக்கு ராஜன் எங்க ரங்கராஜன் தான்” என்ற அவரது தசாவதார பாடல் வரிகள் வாயிலாகவும், வாலி அவர்களுக்கு அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். அவரது விஜயத்தால், பரமபதம் இப்போது கலகலப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்

Wednesday, April 11, 2012

திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை

பாரதியார் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பேராசிரியராக, பல ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்ற, எனது நண்பர் முனைவர் திரு.வெங்கடாசலம் அவர்கள், இந்த இடுகைக்கு இடப்பட்ட தலைப்பில் ஒர் நூல் எழுதியிருக்கிறார். நூல் விரைவில் வெளி வர உள்ளது. நண்பர் எனக்கு நூலின் சிலபல பகுதிகளை வாசிக்க அனுப்பியிருந்தார். ஒரு புதிய கண்ணோட்டத்தில், சிந்தனையைத் தூண்டுவதாக, நான் படித்த குறள் உரைகளிலிருந்து வித்தியாசமான ஒன்றாக, முக்கியமாக வாசிக்க ஆர்வமாக இருந்தது! முழுதும் வாசித்த பின்னர், ஒரு மதிப்புரை எழுத திட்டமிருக்கிறது. இப்போது, திரு. வெங்கடாசலமே எழுதி அனுப்பிய நூல் அறிமுக முன்னுரையில் நான் சில நூல் குறிப்புகளை சேர்த்ததில் விளைந்த கட்டுரை கீழே!

என்றென்றும் அன்புடன்
பாலா


*****************************************************************************************************************
என்னுடைய நண்பர் தமிழ் பேராசிரியர் ஒருவரிடம் நான் இப்புத்தகத்தை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறிய போது . . . ஹும் நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தமிழில் எதாவது எழுதவேண்டும் என நினைப்பவர்களெல்லாம் எழுதுவது திருக்குறளைப் பற்றித்தான். நூற்றுக்கணக்கில் வந்தாகிவிட்டது இனியும் என்ன எழுதப்போகிறீர்கள் என்றார். சில மணித்துளிகள் என் நா என்னுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டது! ஒருவாறாக சக்தியைத் திரட்டிக்கொண்டு தொண்டையைச் சரி செய்து கொண்டு பேசலானேன். . . . என்னுடைய தடுமாற்றத்தைக் கண்ணுற்ற அவர் இளம் சிரிப்புடன் என்னை நோக்கியவாறு இருந்தார். திடிரென்று என்னுள் ஒரு உத்வேகம். சரி சார். . .

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று 236


என்ற குறட்பாவுக்கு என்ன பொருளென்று கூற இயலுமா என்றேன். இக்குறள் எல்லா மேடைப் பேச்சாளர்களும் பயன்படுத்தும் குறளாயிற்றே என்றவர் ஒரு துறையில் பணி புரியும் ஒருவன் அத்துறையினரின் பாராட்டுதல்களை பெறும் வண்ணம் பணி புரியவேண்டும் இல்லையென்றால் அவன் அத்துறையில் பணி புரியாதிருத்தல் நலம் என்று பொருள் என்றார். முதலில் பரிமேலழகர் ஒருவன் புகழ்பட வாழவில்லை என்றால் அவன் பிறவாதிருத்தலே நலம் என்று கூறி உள்ளார் என்று தொடர்ந்தார். நான் அவரை இடைமறித்துக் கேட்டேன்: புகழ் என்றால் என்ன பொருள் என்று கூறமுடியுமா? பேராசிரியர்க்குக் கொஞ்சம் எரிச்சல். புகழென்றால் பாப்புலர். . . பேரும் புகழும் பாராட்டும் பெற்றிருப்பது என்றார். மன்னியுங்கள் திருவள்ளுவர் புகழ் என்றசொல்லை அந்தப்பொருளில் பயன்படுத்தவில்லை. புகழ் என்பது ஒரு கலைச்சொல். அதன் பொருள் அதிகாரத்தின் முதல் குறட்பாவில் உள்ளது. அந்தக்குறள்:

ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு 231


இவ்வதிகாரம் ஒப்புரவு மற்றும் ஈகை அதிகாரங்களுக்குப் பிறகு வருவது. ஒருவனுடைய ஆன்மாவிற்கு (உயிர்க்கு) இவ்வுலகில் கிட்டும் ஊதியம் என்னவென்றால் இவ்வுலக வாழ்க்கை அவனுக்கு பிறருக்கு ஈகை புரியவும் ஒப்புரவு செய்யவும் ஒரு வாய்ப்பை நல்கி இருக்கிறது என்பதாகும் என்றேன். இப்படி ஒரு பொருளை அவர் அறிந்திருக்கவில்லை.

மேலும் திருவள்ளுவர் சிறப்பான நூல்களை எழுதுவோரெல்லாம் தம் நூல்களுக்கு தேர்வு செய்யும் கருப்பொருள் அவ்வாறு ஈகை புரிந்து வாழ்ந்தவரின் வாழ்க்கையாகும் என்று தனது இரண்டாவது குறளில் கூறுகிறார் ஆகவே புகழ்(இசை) என்றால் ஈகை மற்றும் ஒப்புரவு செய்து அதன்மூலம் பயனாளிகளின் மனதில் பாராட்டையும் மதிப்பையும் பெறுவது மட்டுமே என்றேன்.

சற்றே அசந்து போன பேராசிரியர் அதனால் ஆன்மாவுக்கு என்ன லாபம் என்றார் பிறருக்கு மனமுவந்து தமக்கு அசௌகர்யம் ஏற்படுத்திக்கொண்டும் கூட உதவுவதென்பது ஒருவன் அவனுடைய ஆன்மாவில் நின்று செயல்படும்போது மட்டுமே சாத்தியம். (ஈகோவில் இருக்கும்போது சாத்தியமே இல்லை.) ஆகவே அப்படிச்செயல்படும் ஒருவன் புகழப்படும்போது அவன் மேலும் மேலும் தன்னுடைய ஆன்மாவில் திளைப்பதற்கு ஊக்கம் பெறுகிறான். அப்படி ஆன்மாவில் நிலைத்திருக்கும் ஒருவனுடைய ஆன்மா மெல்ல மெல்ல மேம்பாடு அடையும். முற்றிலும் மேம்பாடு அடைந்த ஆன்மா பிறப்புச்சங்கலி அறுந்து கடவுள் உலகில் நிரந்தரமாகக் குடிபுகும்.

இவ்வாறு ஆன்ம மேம்பாடு அடைவதே இவ்வுலக வாழ்வின் பொருள் என்பதை பரிபூரனமாக உணர்ந்தவனை வித்தகன் என்ற சொல்லால் அதிகாரத்தின் ஐந்தாவது குறளில் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் என்று கூறி நிறுத்தினேன். பேராசிரியர் ஆச்சரியப்பட்டு, வித்தகர் என்றால் ஆங்கிலத்தில் wise என்று கூறுகிறோமே அதுதான் என்றல்லவா நினைத்திருந்தேன் . . . அப்படியானால் அக்குறளுக்கு என்ன பொருள்? மிக ஆவலாகக் கேட்டார் அவர். அந்தக்குறள்:

நத்தம்போல கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது


அதாவது வாழ்க்கையில் செழிப்பும் வறட்சியும் அல்லது இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவன. இவ்விரண்டு நிதர்சனங்களை மனதளவில் ஒப்புக் கொண்டு துன்பம் வரும்போது அதனை convert the problem into opportunity எனப்படுவதைப் போல அதை தன் மீது ஒரு நல் அழுத்தமாக எடுத்துக்கொண்டு அயராது தன்னால் இயன்ற அளவில் மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பவனை வித்தகன் என்று அழைக்கிறார் திருவள்ளுவர் என்றேன். பேராசிரியர் மௌனமானார். ”இது மாதிரி 584 குறட்பாக்களுக்கும் 33 அதிகாரங்களுக்கும் புதுப்பொருள் இத்துணை நூற்றாண்டுகளில் வராத பொருள் கண்டுள்ளேன். திருக்குறள் ஒரு அருமையான ஆற்றுப்படுத்தும் மன நூல். அதன் முழுப்பயனும் தற்போது உள்ள உரைகளால் கிட்டாது என நான் மனதாற நம்புவதால் இந்நூலை எழுதினேன்” என்று கூறினேன். பேராசிரியர் நெகிழ்ந்து போனார். என்னுடைய முயற்சிக்கு தன்னுடைய இதயபூர்வ இல்லை இல்லை ஆன்ம பூர்வ வாழ்த்துகளென்றார்.

மேப் லித்தோ சைசில் 570 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.285. புத்தகம் வேண்டுவோர் 09886406695 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். அல்லது prof_venkat1947@yahoo.co.in என்ற முகவரிக்கு எழுதவும்.

நூலிலிருந்து சில குறிப்புகள்:

ஒவ்வொருவருக்கும் அவருடய பின்னணி எதை ஒன்றையும் புரிந்துகொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும். சரித்திர ஆசிரியர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் அவரவரின் சார்பினைப்பொறுத்து ஒரே செய்தியை வேறு வேறு விதமாக விவரிப்பதை நாமெல்லாரும் அறிவோம். அவ்வகையில் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் உளவியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றியதும் ஆய்வுகளை வழி நடத்தியதும் என்னை திருக்குறளை ஒரு உளவியல் புத்தகமாகப் பார்க்க வைத்துவிட்டது. அந்தப்பார்வையில் சொல்வதற்கு புதிய செய்திகள் நிறைய உள்ளதாக எனக்குப்பட்டதாலேயே நான் இம்முயற்சியில் இறங்கினேன். இல்லையென்றால் தமிழை நன்றாகக் கல்லாததோடு இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவும் தெரியாத நான் இம்முயற்சியில் இறங்குவேனா? முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரங்களுக்கும் ஐநூற்று எண்பதுக்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கும் புதிய பொருள் இத்தனை நூற்றாண்டுகளில் நானறிந்தவரை யாரும் கூறாத விளக்கங்களையும் பொருள்களையும் தரத்துணிவேனா? ஆகவே வாசகர்களும் தமிழன்பர்களும் இந்நூல் ஒரு உளவியல் மாணவனின் பார்வை, அந்தப்பார்வையில் கிட்டும் விளக்கம் என்று மட்டுமே இம்முயற்சியை எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

திருவள்ளுவர் காட்டும் மனநல அடையாளங்கள்:
 தம்முடைய வாழ்க்கை, தொழில் மற்றும் காதல் ஆகியனவற்றின் செயல் மற்றும் முயற்சிகளை சமூக நலன் மற்றும் தம்முடைய நலன் ஆகிய இரண்டினையும் ஒரு சேர மேம்படும்படி அமைத்துக் கொள்ளுதல்,
 எல்லா உயிரிகளிடமும் அன்பு பாராட்டுவதில் அசாதாரன எல்லைக்குச் செல்வது , தேவைப்படின் அருள் செய்வது அதாவது ஒருவருடைய உரிமையை அவர் துய்ப்பதற்கு பக்க பலமாகச் செயல்படுவது, அந்தச் செயல்பாட்டில் பெரும் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஆகியவற்றை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுதல்,
 எல்லா உயிர்களிடமும் ஒப்புரவு கொண்டு ஒழுகுவது அதாவது தன்னளவில் பொருள் உதவி, உழைப்புதவி, திறனேற்றல் ஆகியனவற்றை தகுதியானவர்க்குத் தருதல்,
 தமது உரிமையை விட்டுவிடாமலும் பிறர் உரிமையைப் பறிக்காமலும் செயல்படுவது,
 பிறருடைய பிரச்சனைகளை அவர்களிடத்தில் தம்மை வைத்து அறிந்து கொண்டு ஆவன செய்வது, இச்செயல்பாட்டில் அடுத்தவரைத் தணடனைக்கு உட்படுத்த நேரினும் அதனைச் செய்வது (கண்ணோட்டம்),
 எந்த சூழலிலும் உண்மையை அதையும் புரை தீர்ந்த நன்மை பயக்கும் வண்ணம் பேசுவது,
 கோபம், ஆசை, பொறாமை வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை அறவழியில் நிர்வகிப்பது
 தன்னுடைய பொறி (aptitude/strength) இன்னதென அறிந்து அதற்குத்தக திறன்களை ஏற்படுத்திக் கொண்டு தான் தேர்ந்த துறையின் அறிவுக்கு விசுவாசமாக தாளாது உழைப்பது,
 எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் (தம்மையும் சேர்த்து) அப்பொருளின் உண்மைத் தன்மையை அறிந்து அதனைக் கடைப்பிடிப்பது,
 எல்லாப் பணிகளிலும் அப்பணிக்கு ஆதாரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள சிறந்த நடை முறைகளை மேற்கொண்டு ஒழுகுதல் (following evidence based best practices of a given profession),
 தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும், பணி சார்ந்த வாழ்விலும், பொது வாழ்விலும் தம்முடைய செயல்களனைத்தையும் மேற்கண்ட கொள்கைகளின் வழி நடாத்துவது,
 “நான் ஒரு மனிதன் என்ற அடிப்படையில் குற்றம் புரியும் ஏது உள்ளவன். பல சமயங்களிலும் விழிப்பின்றி இருப்பின் பல்வேறான குற்றங்களைப் புரியக்கூடும். ஆகையால் சதா சர்வகாலமும் விழிப்புடன் நான் இருக்கவேண்டும். அதையும் மீறி நான் தவறு செய்துவிட்டால் என்னுடைய தவறுக்கு வருந்தி என்னால் பாதிக்கப்பட்டவருக்கு தக்க இழப்பு மீட்பினை ஈந்து சமாதானம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நான் குற்ற உணர்வில் ஆழ்ந்து விடாமலிருக்க வேண்டும். அரசு நீதி பரிபாலனம் செய்யும்போது தரும் தண்டனையையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு தண்டனையை எனக்குப் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டு தண்டனைக்குப் பிறகு மறுவாழ்வு வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டும்” என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதனைச் செயல் படுத்துதல் ஆகியனவாம்.
 மொத்தத்தில் எந்த செயலையும் சிந்தனையையும் ஒருவன் தன்னுடைய ஆன்மாவினை கடவுளர் உலகம் புகுவதற்குத் தகுதியடையும் வண்ணம் செம்மைப்படுத்துவதற்கு உறுதுணையாக அமைத்துக் கொள்வது உயர்ந்த மனநலத்தின் அடையாளம். இந்த வகையில் திருக்குறள் ஒரு ஆன்மிகப்பயண வழி காட்டி.

இவ்வடையாளங்களெல்லாம் Cognitive Psychology மற்றும் Humanistic Psychology ஆகிய உளவியல் துறைகளின் கருத்துக்களோடு ஏற்புடையவையே. கடவுள் மனிதருடைய இவ்வுலக வாழ்வில் தலையிடுவதில்லை என்பது திருவள்ளுவருடைய கொள்கையாக உள்ளது. ஆகையால் உளவியலருக்கு திருவள்ளுவர் வழியில் மனிதர்களை ஆற்றுப்படுத்துவதில் பிரச்சனை இருப்பதற்கு வாய்ப்பு இல்லை..

திருவள்ளுவர் ஒரு எதார்த்தவாதி. பல சமயங்களில் அவர் வகுத்தளித்துள்ள கோட்பாடுகளை முற்றிலும் பிறளாது கடைப் பிடித்தல் மிகக்கடினம் என்பதனை உணர்ந்துள்ள அவர் எல்லாரையும் ஊக்குவிக்கிறாரே ஒழிய யாரையும் நீ தவறி விட்டாய் இனி உனக்கு வாழ்வில்லை என்று சபிப்பதில்லை. கடவுளின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று கூறுவதில்லை. தப்ப விரும்பினால் செய்ய வேண்டிய பரிகாரம் இதுவென எதையும் கூறுவதில்லை. சரியாகச் சொல்வதானால் கடவுள் தண்டிப்பார் என்ற கருத்து திருக்குறளில் இல்லை. ஆனால் அறம் தண்டிக்கும் என்று உறுதி படக்கூறுகிறார். அது எவ்விதம் என்பதை நூலில் பல இடங்களில் விளக்கி உள்ளேன்.

மன நலத்துடன் (அறவழியில் வாழும் வாழ்வு) கூடிய வாழ்வினைத் தேர்ந்தெடுத்து வாழாதார்க்கு கடவுளர் உலகில் குடிபுகல் என்ற இலக்கை நோக்கிய பயணம் நீண்ட நெடிய பாதையாக முடிவே இல்லாமல் இருக்க மன நலத்துடன் வாழ்வோர்க்கு அது மிகக் குறுகியதாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். சிறிதளவே அப்பாதையில் ஒருவர் முன்னேறினாலும் முன்னேற்றம் தானே ஒழிய பின்னேற்றமில்லை. ஒரு பிறவியில் ஆன்ம பலம் பெரிதும் குன்றும் அளவுக்கு அறம் பிறழ்ந்த வாழ்வு வாழ்வோருக்கு பின் வரும் பிறவிகளில் இழந்த ஆன்ம பலத்தை மீட்டு எடுப்பதற்கே பல காலம் பிடிக்குமென்பதும் ஆன்ம பலம் அதிகமாக உள்ளவர்க்கு பின் வரும் பிறவிகளில் அவர்கள் அறவழியில் வாழ்வதற்கு அவ்வான்ம பலம் உறுதுணையாக இருக்குமென்பதும் மிகவும் ஆறுதல் அளிப்பதும் நம்பிக்கையூட்டுவதுமான செய்தியாகும். கர்மா கொள்கையை (Theory of karma) இந்தக்கோணத்தில் திருவள்ளுவர் அணுகி உள்ளார் என்றே தோன்றுகிறது.

கடவுள் கொள்கையைப் பொருத்தமட்டில் கடவுள் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்ற கேள்விக்கே செல்லாமல் ஒருவர் திருக்குறளால் பயன்பெறலாம் என்பதுவும் கண்கூடு. இந்தக் கருத்தின்படியும் உளவியலருக்கு திருவள்ளுவருடைய கடவுள் கொள்கையின் பால் குழப்பம் இருக்கமுடியாது.

மேலும் எனது நூலில் நான் கூறி உள்ள புதிய விளக்கவுரைகளில் சில அல்லது பல பிறராலும் கூறப்பட்டும் இருக்கலாம். அப்படி கூறப்பட்டு இருக்கும் உரைகளை என் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நான் அவற்றை இப்புத்தகத்தின் அடுத்த பதிப்பில் குறிப்பிட்டு அவர்களுடைய பங்களிப்பை ஏற்று உலகுக்கு அறிவிப்பேன் எனக்கூறிக் கொள்ள விரும்புகிறேன். அருஞ்சொற்பொருள் விளக்கம் அதிகாரம் மற்றும் குறட்பாக்கள் ஆகியவற்றின் பொருளடக்கம் புத்தகத்தின் இறுதியில் உள்ளன.

நூலிலிருந்து, மாதிரிக்காக, ஒரு குறளுக்கான விளக்கவுரையை தந்துள்ளேன்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு 5


புதிர்: குறளில் நான்கு புதிர்கள் உள்ளன. இருள் என்றால் என்ன பொருள்? இருவினைகள் யாவை? இறைவன் பொருள்சேர் என்றால் என்ன பொருள்? புகழ் புரிந்தார் மாட்டு என்றால் என்ன பொருள்?

விளக்கம்: இருள் என்றால் குழப்பம் அல்லது மயக்கம். அதாவது ஒன்றை இன்னொன்று எனப்பொருள் கொள்வது. சற்று இருள் நிறைந்த ஒரு இடத்தில் கிடக்கும் கயிற்றினைப் பாம்பு எனத் தவறுதலாகப் பொருள் கொண்டு விடுகிறோமல்லவா? இவ்வுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக்களம், இவ்வுலகத்தில் நாம் துய்ப்பன யாவும் பயிற்சிக்கான பொருள்கள். பயிற்சியின் நோக்கம் உயிரை அல்லது ஆன்மாவை கடவுளர் உலகில் வசிப்பதற்கு தகுதியானதாக மேம்படுத்துவது. ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையான பொருள். இதைப் புரிந்து கொள்ளாமல் இவ்வுலகமும் அதன்பொருள்களும் உண்மையானவை என மயங்கி நிற்றலே இருளாம்.

இரு வினைகளாவன, சிந்தனையும் மற்றும் செயலாம். (சிந்தனையும் ஒரு செயலே. சிந்தனைத் தொழிலாளிகள் என்ற கருத்தினை நாம் அறிவோம்.)

அடுத்து இறைவன் பொருள் சேர் என்றால் இறைவன் மட்டுமே உண்மைப்பொருள் என்பதைச் சார்ந்த ஒன்று என்று பொருள். அந்த ஒன்று எது? இந்தக்கேள்வி நாம் நான்காவதாக எழுப்பிய புதிர்வினாவுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. புகழ் புரிந்தார் மாட்டு என்று சொல்வதன் மூலம் புகழ் என்ற சொல்லை புகழுக்குரிய செயலைக் குறிப்பதாக திருவள்ளுவர் கையாண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது அல்லவா? திருக்குறளில் புகழ் என்ற சொல் ஒரு கலைச்சொல்லாக சிறப்பாக வரையறைக்கப்பட்டுள்ள ஒரு சொல். ஒருவருடைய, சமூகத்துக்குப் பெரிதும் பயன்படும், உள் நோக்கமில்லாத செயலின் அருமை கருதி அவர் பால் அவருடைய பயனாளிகளிடத்தும் அவரை அறிந்தவர்களிடத்தும் தோன்றும் மதிப்புதான் புகழ் (231). பிரபலம்(stardom, celebrity, popularity) அல்லது பொரும் புள்ளி என்பது போன்ற பொருளில் புகழ் என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப் படவில்லை.
உரை:இறைவன் ஒருவனே உண்மையான பொருள். இதை உணர்ந்தவர்களிடத்தில் இவ்வுலகமும் அதன்பொருள்களும் உண்மையானவை என்ற அறியாமை இருட்டு இராது. அதேபோல் அவர்கள் பிறிதொரு உண்மையையும் அறிவர். அஃதாவது, தங்களுடைய உழைப்பு, நேரம், திறன், முயற்சி மற்றும் பொருள் ஆகியனவற்றை மனமுவந்து தேவைப்படும் நலிந்தோருக்கும் தகுதியான பிறருக்கும் ஈவதன் மூலம் தங்களுடைய ஆன்மா மேம்பாடு அடையும், முற்றிலும் மேம்பாடு அடைந்த ஆன்மா கடவுளர் உலகம் புகும் என்பதே அது. ஆகவே கடவுளர் உலகு புக சித்தம் கொண்டு அருளாளர்களாக ஒழுகுபவர்களிடம் தீயன சிந்திக்கும் செயலும் தீமை புரியும் செயல்பாடும் இராது.
வேறு விளக்கமும் உரையும்: இதல்லாமல் ”இறைவன் பொருள்சேர்” என்பதை இறைவனின் எட்டுத் தன்மை களைச் சார்ந்த என்று பொருள் கொள்ளவும் இடமுள்ளது. அவ்விதம் கொண்டால் இறைவனின் எட்டுக் குணங்களில் மனிதர்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்க இயலக்கூடிய,வேண்டுதல் வேண்டாமை இலாதிருத்தல், ஐம்புலன்களின் செய்தியை நெறிப்படுத்திப் அறவழிப் பயன்பாட்டுக்குள்ளாக்குதல் மற்றும் எல்லா உயிரிகளிடத்தும் கருணையுடன் இருத்தல் ஆகியவற்றை தம் வாழ்வில் மேற்கொண்டு வாழ்வோரிடத்தில் இவ்வுலகம்தான் உண்மையானது என்ற மயக்கம் காரணமாகத் சிந்தை மற்றும் செயலில் தோன்றும் தீமைகள் இரா என்ற பொருள்கிட்டும்.

பின் குறிப்பு: இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல, உண்மையில் தமிழ்ப்பேராசிரியர் எவரையும் நான் சந்திக்கவில்லை. தங்களுக்கு சற்று ஆர்வம் ஏற்படச்செய்ய கற்பனையாக ஒரு பேராசிரியரை உருவாக்கினேன். பிழையை அன்புடன் பொருத்தருள்வீர் என நம்புகிறேன். நன்றி வணக்கம்.

அன்பன்
அர. வெங்கடாசலம்

**************************************************************************************************************************

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails